பெண்மையின் பெருமை

முன்னுரை:
"பெண்கள் நாட்டின் கண்கள்" என்பது ஆன்றோர் வாக்கு.
பெண் என்பவள் போற்றுதல் மிகுந்தவள். பெண்மை என்பது தாய்மை, நேசம், ஒழுக்கம், உயர்வு, உழைப்பு, சேவை போன்ற பல அர்த்தங்களை உள்ளடக்கியது. பூமியில் பிறந்த பெண், மகளாய், தங்கையாய், அக்காவாய், அண்ணியாய், மனைவியாய், நாத்தனாராய், மாமியாராய், பாட்டியாய், பல அவதாரங்களாய் பிறவி எடுத்துள்ள பெருமை பெண்களை மட்டுமே சாரும்.
பெண் வளரும் போதே தன்னடக்கத்துடன் வளர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறாள். பண்பாடு என்ற பெயரில் ஒடுக்கப்படுகிறாள். ஒரு பெண்ணின் முன்னேற்றமே ஒரு வீட்டின் நாட்டின் முன்னேற்றமாய் கருதப்படுகிறது.
பெண் கல்வி:
பாரத நாட்டில் பெண்கள் கல்வி என்னும் ஒளி பெற்றால் நாடு சிறந்து விளங்கும்.
ஒரு ஆண் கல்வி கற்றால் அது அவனுக்கு மட்டுமே பயன்படுகிறது, ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் அது அவளுக்கு மட்டுமின்றி அவளைச் சார்ந்த குடும்பத்திற்கும், இந்த சமுதாயத்திற்கும் பயன் அளிக்கிறது. அதனால் தான் ஒரு சமுதாயத்தில் பெண் கல்வி அவசியமாகிறது.
"கல்வி எனல் அறிவாகும் அறிவே கல்வி" என்கிறார் பாரதிதாசன்.
கல்வி அறிவு பெற்ற பெண் சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலைப் பெறுகிறாள். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் திகழ்கிறாள்.
"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!" என்னும் கவிமணியின் கருத்தினை மெய்ப்பிக்கப் பிறந்த வீராங்கனைகள் தான் பெண்மணிகள்.
சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண்கள் அரசியலிலும், சமுதாய வாழ்விலும், அனைத்துத் துறைகளிலும் தங்களுக்கு சம உரிமை வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தி சம உரிமை பெற்றனர்.
"பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள்
நடத்த வந்தோம்"
என்று பெண்கள் வாயிலாகவே பாட வைத்த பாரதியாரின் கனவை நினைவாய் மாற்றியமைத்தவர்கள் பெண்கள்.
அன்னிபெசண்ட் அம்மையாரின் Home Rule இயக்கம் பெண் கல்வியை முன்னிலைப்படுத்தியது.
பெண்களுக்கு என இந்திய நாட்டில் இட ஒதுக்கீடு சட்டப்பூர்வமாக்கப்பட்டது. பெண்களுக்கெனத் தனிப் பள்ளிகள், கல்லூரிகள், தனிப் பல்கலைக்கழகம் வந்தன. பெண்கள் உயர்கல்வி பெற்று பல்கலைக்கழக வகுப்புகளில் முதல்நிலை பெற்றனர். பெண்களின் கல்வி அதிக அறிவும் திறமையும் கொண்ட அடுத்த தலைமுறையை முடிவு செய்கிறது. பத்திரிக்கை, நூல் வாசிக்கும் எல்லை பெண்களுக்கும் விரிவடைந்து பெண் எழுத்தாளர், பெண் கலைஞர்களும் வெளிவரத் தொடங்கினர். பெண்களின் பொற்காலம் பிறந்தது.
பெண்ணின் சிறப்புகள்:
பெண் உழைப்பின் உருவமாக, பொறுப்பின் உறைவிடமாக அடக்கத்தின் விளைநிலமாக இருப்பவள் பெண். குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களுக்கு விடை காணும் வளம் மிக்க பெண்களாய் திகழ்கின்றனர். அன்பு என்னும் பாடத்தை குடும்பத்தின் வழியாய் பெற்று தாய்மைப் பண்போடு குடும்ப உறவுகளை அரவணைத்து சண்டை சச்சரவு இல்லாமல் குடும்பத்தை ஒற்றுமையாய் வழிநடத்தும் பெண்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்.
இயல், இசை நாடகம் எல்லாவற்றிலும் கை தேர்ந்தவர்களாகத் திகழ்ந்தனர்.
பெண்ணின் பெருமை:
"தவில்" என்பது ஒரு பாரம்பரிய தென்னிந்தியத் தோல் வாத்தியமாகும். ஆண்களை அசரவைக்கும் தவில் இசைக்கருவியை அயராமல் வாசிக்கும் பெண் தவில் கலைஞர் திண்டுக்கல் பி. சாந்த குமாரி. இவர் ஆண்களே 30 நிமிடம் தொடர்ந்து வாசிப்பதற்கும் மூச்சு வாங்கி தளர்ச்சி அடைந்து விடும் நிலையில் 22 ஆண்டுகளாகத் தவில் வாசித்துச் சாதனை செய்தவர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சாந்தகுமாரி என்ற பெண்மணி.
ஆண்களுக்கு இணையாக அனைத்துத் துறைகளிலும் பெண்களும் சாதனை படைத்து வருகின்றனர்.
சாதனைப் பெண்மணி:
ஆண்கள் மட்டுமே மருத்துவம் படித்துப் பட்டம் பெற்று வந்த காலத்தில் பெண்களால் மருத்துவப் பட்டம் பெற முடியும் என்று பெற்றவர். தேவதாசி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர். இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி. தமிழ் நாட்டிலே முதல் முதலாய் புற்று நோய் ஆராய்ச்சி கழகம் நிறுவினார். சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்து அரசியலிலும் ஜொலித்தார். இளமைத் திருமணத்தை எதிர்த்துப் பெண்ணுக்குச் சமவாய்ப்பை அன்றே தரச்செய்தவர் சாதனைப் பெண்மணி முத்துலட்சுமி அவர்களை வணங்குவோம்!
வீரப் பெண்மணிகள்:
இந்திய சுதந்திர போராட்டத்தில் பெண்களின் பங்கு மகத்தானது. மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள், ராணி மீனாட்சி, சிவகங்கை அரசி வேலு நாச்சியார், இவர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.
ராணி மங்கம்மாள்:
நாயக்க மரபில் வந்த அரசி மங்கம்மாள் அவர்கள் சாலை, குளம், கால்வாய், அமைத்தார்கள். ராணி மங்கம்மாள் கட்டிய சத்திரம் இன்றும் மங்கம்மாள் சத்திரம் என்ற பெயரில் மதுரையில் இருந்து வருகிறது. தஞ்சை, திருவாங்கூர் இவர்களது ஆட்சிக்கு மணிமகுடமாகத் திகழ்ந்தது. எம்மதத்தையும் சம்மதமாக ஏற்றுக்கொண்டு வரலாற்றில் இன்றும் நிலை நிற்கும் அரசி ராணி மங்கம்மாள்.
வேலு நாச்சியார்:
சிவ கங்கை காளையர் கோயிலை வெள்ளைக்காரர் பிடிக்க எண்ணிய போது சிவகங்கை மண்ணின் ராணியான வேலு நாச்சியார் ஆங்கிலேயரை எதிர்த்த முதல் இந்தியப் பெண்மணி! பெண்கள் அரசியலில் ஈடுபட்டார்கள். நாட்டு விடுதலைக்காகப் பல பெண்கள் இணைந்தனர். பெண்கள் முன்னேற்றமும் நாட்டு விடுதலை உணர்வும் இணைந்தன. இதனால் பெண்கள் அரசியலுக்கு வந்தனர்.
ஈ.வெ.ரா மனைவி நாகம்மாள், சகோதரி கண்ணம்மாள் போன்றோர் மதுபான கடை மறியல் செய்து மது ஒழிப்புக்குக் குரல் கொடுத்தனர்.
சுயமரியாதைச் சுடராகத் தந்தை பெரியாரின் கொள்கை நலனாக பெண்ணுரிமைப் போரின் தளபதியாக அமைந்தவர் மணியம்மையார். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையன் துப்பாக்கி காந்தியடிகளை குறிவைத்தது. காந்தி உடலை தன் உடலால் மறைத்து தன் மீது குண்டு ஏந்தி மகாத்மா காந்தியைக் காத்த வீரமங்கை வள்ளியம்மை. தன்னுயிர் தந்து காந்தி உயிர் காத்த தியாக மங்கை வரலாற்றில் பேரிடம் பெற்றார்.
தியாகச் சுடராகவே பெண்கள் திகழ்கின்றனர். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு பெண் மறைந்திருக்கிறாள் என்பதே உண்மை. விடுதலையடைந்த இந்தியாவிற்கு முகவரியைக் கொடுத்து விட்டு தங்களை மறைத்துக் கொண்ட ஆயிரக்கணக்கான வீரப்பெண்கள் பலர்.
கிரீடத்தில் பதித்த முத்துக்கள் பெண்கள்!
பெண்கள் தடைகள் பல தாண்டி தலைமைத்துவ பொறுப்புகளை ஏற்று சமூகம் மற்றும் கொள்கைகளை, வடிவமைக்கும் ஒரு புதிய யுகத்தை உருவாக்கி வருகின்றனர். பெண்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.
பெண்களைக் கடவுளாக வழிபடும் நாட்டிலே தான் நாம் வாழ்கிறோம். பெண்கள் பாதுகாக்கப் பட வேண்டியவர்கள் மட்டுமல்ல மதிக்கப் பட வேண்டியவர்கள்.
முடிவுரை:
பெண்கள் அன்பின் உருவம், வலிமையின் அடையாளம் பெண்கள் தங்களின் தியாகம், பொறுமை மற்றும் மன உறுதியால் போற்றுதலுக்குரியவர்களாகத் திகழ்கிறார்கள். வீட்டில் விளக்கேற்றும் பெண்களே உலகிற்கு ஒளியாய் திகழ்கிறார்கள். அத்தகைய பெண்மையை பேணிப் பாதுகாத்து போற்றுவோம்!
வாழ்க பெண்கள்!
வளர்க பெண்ணியம்!
- ரூத் மதன், பாளையங்கோட்டை